பேனா முனையில் பேசுவோம்
தோழிகள் அனைவரும் நலமா?
சுக்காம்பட்டி என்ற கிராமத்திலிருந்து பிரியா என்ற புதிய தோழி கடிதம் எழுதியிருக்-கிறார். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளால், கிராமங்களில் வாழும் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று வருத்தப்பட்டு கடிதம் எழுதியி-ருக்கிறார். “நான் பெண்கள் மலரின் தீவிர வாசகி. இரண்டு முறை கடிதம் எழுதி வெளிவருமோ? வராதோ? என்ற எண்ணத்தில் போஸ்ட் செய்யாமல் விட்டு விட்டேன். நான் பட்டதாரிப் பெண்.
அந்தக் கொலைகளை பார்த்து பயந்த என்னைப் போன்ற கிராமப்புறப் பெண்களின் பெற்றோர்கள் பெண்களை வெளியில் அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் படித்தும் எங்களின் வாழ்க்கை நாலு சுவருக்குள்ளேயே முடிந்து விடும் போலுள்ளது. பெண்கள் மலர் தோழிகள் இணைந்து மகளிர் தின விழா, பொங்கல் விழா மட்டும்தான் நடத்த முடியுமா? பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு நம் தோழியரால் எதிர்ப்பு காட்ட முடியாதா?” என்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் பிரியா.
பிரியாவின் கேள்விக்கு தோழிகளிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
“நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் நாளிதழை வாங்கிப் படித்து வருகிறேன். பெண்கள் மலர் வந்ததும் எங்கள் வீட்டில் அதை உடனே எடுத்து படிக்கும் முதல் ஆள் நான்தான்.
நண்பர்கள் கூட கிண்டலடிப்பார்கள் ‘பெண்கள் மலரை’ இப்படி விரும்பி படிக்கிறாயே என்று? பெண்கள் மலர் என்று பெயர் உள்ளதால் ஆண்கள் படிக்கக் கூடாது என்று பொருள் கொள்ளக்கூடாது. அதில் வரும் செய்திகள் அனைத்தும் முக்கியமாக ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்தான் என பதில் சொல்லுவேன். இதில் வரும் குறிப்புகளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் வெளிநாட்டில் வசிக்கும் என் மகளுக்கு அனுப்பி வைப்பேன்” என்று கடிதம் எழுதியிருக்கிறார் திருவண்ணா-மலையி-லிருந்து குலசேகரன் என்ற வாசகர்.
பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும், அதை தீர்க்கும் வழிமுறைகளையும் ஆண்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தன் வீட்டில் இருக்கும் பெண்ணின் நிலையை உணர்ந்து அனுசரணையாக வாழ முடியும். அதை செய்யும் நண்பர் குலசேகரனுக்கு பெண்கள் மலர் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.