சாதனை பெண்கள்

29 பதக்கங்களை
குவித்த மாணவி


ட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!


- இது பெண்களைப் பற்றிய பாரதியின் கனவு. அந்த பாரதி மட்டும் இன்று உயிரோடு இருந்தால் அனுஷா பாலகிருஷ்ணனைப் பார்த்து, ‘பலே பலே!  நம் கனவை நினைவாக்கிய பெண் இவள்!’ என்று சந்தோஷப்பட்டிருப்பார்.
 

யார் இந்த அனுஷா?
 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யின் 14வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலை நூற்றாண்டு கலையரங்கில் கடந்த 18ம் தேதி நடந்தது.  விழாவில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகக் கவர்னர் பர்னாலா பட்டங்களை வழங்கினார். பாடவாரியாக முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒன்றல்ல, ஐந்தல்ல, பத்தல்ல... 29 தங்கப்பதக்கங்களை வாங்கி பார்வையாளர்களை வியக்க வைத்தார் அனுஷா!

பெண்கள் மலருக்காக இந்த ‘தங்க மங்கையை’ பேட்டி காண முயன்றோம். அவர் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டதால் அனுஷாவின் அம்மா லட்சுமி பாலகி ருஷ்ணனிடம் பேசினோம்.
‘அந்த விழாவுக்கு வர்ற வரைக்கும் அனுஷா இவ்வளவு தங்கப்பதக்கம் வாங்கப்போறா ங்கிறது எங்களுக்கு தெரியாது. விழாவில் அவ பேரை வாசிக்க, வாசிக்க எங்களுக்கு பயங்கர சர்ப்ரைஸா  இருந்தது’ என்று தன் மகள் பற்றிய பெருமிதத்துடன் பேசத் தொடங்குகிறார் லட்சுமி பாலகிருஷ்ணன்.


அனுஷா தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப்படிப்பை படித்தது எல்லாம் டில்லியில்தான். மத்தியக் கல்வித் திட்டத்தில் படித்த அனுஷா பத்தாம் வகுப்பில் 500க்கு 449 மார்க் எடுத்து பாஸ் செய்ய அவருக்கு எம்பிபிஎஸ் சீட்டும், கால்நடை மருத்துவப் படிப்பு படிப்பதற்கான சீட்டும் கிடைத்திரு க்கிறது. சின்ன வயதிலிருந்தே கால்நடை மருத்துவ படிப்பை படிக்கவேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்த அனுஷா சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கியிருக்கிறார்.


"சின்ன வயசுலேர்ந்தே அவளுக்கு விலங்குகள்னா ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுல நாங்க எந்த ‘பெட்’ அனிமல்ஸும் வளர்த்ததில்ல. ஆனாலும் அவளுக்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டினா ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு வைத்தியம் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பா. முதல்ல அவளுக்கு சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டுதான் கிடைச்சது. அதுக்கப்புறம்தான் கால்நடை மருத்துவ படிப்பு படிக்க சீட் கிடைச்சது. இவ கால்நடை படிப்பை செலக்ட் பண்ணி படிக்க ஆரம்பிச்சா" என்று கூறும் லட்சுமி டெல்லியில் உள்ள கேந்திர வித்யா பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிகிறார்.


அனுஷாவின் அப்பா பாலகிருஷ்ணன் லண்டனில் உள்ள சிண்டிகேட் வங்கியில் ஜெனரால் மேனேஜர். அனுஷாவிற்கு ஒரு சகோதரி. அவர் அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.


" அனுஷா சின்ன வயசுலேர்ந்தே நல்லா படிப்பா. எல்கேஜியிலிருந்தே அவள்தான் ஸ்கூல் பர்ஸ்ட். பிவிஎஸ்சில் சேர்ந்து படித்த இந்த 5 வருடங்களிலும் அனுஷாதான் முதல்மாணவி. எங்களையெல்லாம் பிரிஞ்சு கல்லூரி ஹாஸ் டலில் தங்கி படிச்சாலும், எதைப் பற்றியும் கவலைப்படாம அவ இவ்வளவு நல்லா படிச்சதுக்கு காரணம் விலங்குகள் மேல அவளுக்கு இருந்த பற்றுதான். அவ விருது வாங்கறதை பார்க்கறதுக்காகவே நான் டில்லியிலிருந்து வந்தேன்.  தங்கமெடல் வாங்கப் போறான்னு தெரியும். ஆனா, இவ்வளவு மெடல்களை அள்ளிட்டு வருவான்னு நான் நினைச்சே பார்க்கல" என்று நெகிழ்கிறார் அனுஷாவின் அம்மா லட்சுமி.
இப்போது அனுஷா மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங்; பிறகு, 3 ஆண்டுகள் மேற்படிப்பு.


"அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவளுக்கு மேற்படிப்பு படிக்க சீட் கிடைச்சிருக்கு. நம் ஊரில் ஹவுஸ்சர்ஜன் என்று சொல்வது போல அங்கு ரெசிடன்சி என்று சொல்வார்கள். மூணு வருஷ படிப்பை முடிச்சுட்டு இந்தியாவுக்கு வந்து விலங்குகளோட குட்டிகளை நல்லா பராமரிக்கணும்னு சொல்லிட்டு போயிருக்கா. நிச்சயம் அவ அதுலயும் ஜெயிப்பா" என்கிறார் லட்சுமி தன் மகளின் மீது இருக்கும் நம்பிக்கையுடன்.


- ராஜி வெங்கடேஷ்.

5 comments:

  1. very nice..and very useful ... then thirumana nethchayam saytha penkalukkana advice or arivurai please send my email id. gowthamigunasekaran1995@gmail.com

    ReplyDelete
  2. பெண் என்றால் சில நபர்கள் கேவலமாவும் குடும்பத்தை மட்டும் பாத்துக்கனும்னு நினைக்கறாங்க அவங்களுக்கு அனுஷா ஒரு படமா இருப்பாங்க அவங்கள போல நானும் எதையாவது சாதிக்கணும் ஒரு வெறி வருது .

    ReplyDelete
  3. பெண் என்றால் சில நபர்கள் கேவலமாவும் குடும்பத்தை மட்டும் பாத்துக்கனும்னு நினைக்கறாங்க அவங்களுக்கு அனுஷா ஒரு படமா இருப்பாங்க அவங்கள போல நானும் எதையாவது சாதிக்கணும் ஒரு வெறி வருது .

    ReplyDelete
  4. அனுஷா போன்ற தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய பெண்கள் இந்த நாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு..அவரது சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete